இஸ்ரேலின் வடக்கில் உள்ள லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதால், அங்கு பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் உரிய முறையில் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ளது.
அத்துடன் லெபனான் மற்றும் சிரியாவுக்கு அருகாமையில் உள்ள நஹாரியா, அகோ, ஹைஃபா, திபெரியாஸ், நசரேத் ஆகிய கிராமங்களுக்கு அருகில் தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குறித்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரை அந்தப் பகுதிக்கு அனுப்பி, பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.