இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையே ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பலில் பயணிக்க ஆசனங்களை பதிவு செய்தவர்கள் தற்போது எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.
குறித்த பயணிகள் கப்பல் சேவை கடந்த அக்டோபர் 10 ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அக்டோபர் 12 ம் திகதி என மாற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் (12) இச்சேவை ஆரம்பிக்காத நிலையில் தற்போது நாளை மறுநாள் 14 ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் கடந்த அக்டோபர் 8ம் திகதி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
காலநிலையைக் பொறுத்து குறித்த திகதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களின் பங்கேற்பில் உள்ள சில சிக்கல் காரணமாக கப்பல் சேவை தாமதமடைவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 10 ம் திகதி சேவை ஆரம்பிக்கும் என நம்பி கப்பல் சேவையில் பயணிக்க இரண்டு நாட்டிலும் கணிசமானவர்கள் முகவர்கள் ஊடாக பயண சீட்டுக்களை பதிவு செய்த போதும் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கப்பல் சேவை எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.