தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, நாளை 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கப்பலுக்கு ‘செரியாபாணி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக குறித்த கப்பல் சேவை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ள குளிரூட்டல் வசதியுடன் கூடிய குறித்த இந்த பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் நாகை துறைமுகம் வந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கப்பல் நேற்றும் இன்றும் சோதனை ஓட்டங்களை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வருவதற்கு 6 ஆயிரம் லீற்றர் எரிபொருள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதுடன் நாகப்பட்டினத்திலிருந்து – இலங்கைக்கு பயணிக்க 6 ஆயிரத்து 500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கையை வந்தடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..