யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் மின்சார கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் வீதி பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வீதியோரத்தில் நின்ற பனைமரம் ஒன்று வெட்டப்பட்டது. இவ்வாறு வெட்டப்பட்ட பனைமரமானது மின்சார கம்பி மீது விழுந்தது.
பனை விழுந்ததால் மின்சார கம்பி அறுந்து வீதியில் நின்ற பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிள் மீது முட்டியது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டார்.
இந்நிலையில் குறித்த பெண் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தில் ஐந்து மின் கம்பங்கள் முறிந்து சேதமாகின. இதனால் அப்பகுதிக்கு மின்சாரம் தடைப்பட்டது. மின்சார இணைப்பினை சீர் செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டனர்.