புத்தளம் மனத்தீவு பகுதியில் நேற்று முன்தினம்(06) இரவு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து புத்தளம் எலுவாங்குளம் பிரதான வீதியின் மணத்தீவு பகுதியில் நேற்று இரவு புத்தளத்திலிருந்து 6ம் கட்டை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி மதிலில் மோதியதில் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது மாடு ஒன்று குறுக்கால் பாய்ந்தமையினால் முச்சக்கர வண்டியைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது வீதியை விட்டு விலகி மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் இரண்டு சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு விபத்தில் சிக்கி காயங்களுக்கு உள்ளாகிய முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் சிறுவர்கள் இருவரையும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தப் பெண் 40 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்