மன்னாரில் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச்சென்ற ஐஸ் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்துவந்த அம்புலன்ஸ் வண்டியின் சாரதி இந்தியாவின் பாம்பன் குந்துகால் பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் அரசு மருத்துவமனையில் அம்புலன்ஸ் வண்டி சாரதியாக பணியாற்றிவரும் தேவராஜன் என்பவர் அரசு அம்புலன்ஸ் வண்டியில் ஐஸ் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர், கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி குறித்த சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை விசாரணைக்குற்படுத்திய போது, அவர் காவலதிகாரியின் கட்டை விரலைக் கடித்துவிட்டு காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னர், இவர் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கையில் இருந்து தப்பி இந்தியாவின் பாம்பன் குந்துகாலைச் சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில், பாம்பன் குந்துகால் பகுதியில் வைத்து கடல்சார் காவல்துறையினரால் தேவராஜன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை காவல் நிலையத்தில் தடுப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது