கொழும்பிலிருந்து வாடகை அடிப்படையில் வேனை ஒன்றை பெற்றுக்கொண்டு அநுராதபுரத்துக்குச் சென்று அங்கு கால்நடைகளை திருடி இறைச்சிக்காக விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வேனுடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ரம்பேவ, அநுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 25 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்ட 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்ட விரோத மாட்டு வியாபாரத்தின் முக்கிய புள்ளியாக செயற்பட்ட முன்னாள் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் ஒரு மாதத்துக்கு முன்னர், அநுராதபுரம், யாழ்ப்பாணம் சந்தி பகுதியில் இரண்டு மாடுகள் மற்றும் அநுராதபுரம் பகுதியில் மூன்று மாடுகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளின்போது, இந்த திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் வெலிசறையைச் சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.