களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகளை பார்வையிட வந்த நபர் ஒருவரால் வாழைப்பழ சீப்புக்குள் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
வாழைப்பழங்களினுள், 3 மற்றும் 4 அங்குல அளவுள்ள 16 ஸ்ட்ரோ குழாய்களுக்குள் ஹெரோயின் போதைப்பொருளை இட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறி்ப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கொண்டு வந்த உணவுகளை சிறைச்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சோதனை செய்த போது குறித்த வாழைப்பழ சீப்பினுள் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போதைப்பொருளை கொண்டு வந்த நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்