வாதுவ பிரதேசத்தில் மசாஜ் நிலையங்களில், சமூக வலைத்தளம் ஊடாக அடையாளம் காணப்பட்ட சில பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான சந்தேக நபரான இராணுவ சிப்பாய் தான் பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் என போலி அடையாள அட்டை மூலம் அச்சுறுத்தி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் போது சந்தேக நபர் மசாஜ் நிலையங்கள், பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட பெண்களை வாதுவ, மொரொன்துடுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் அப்பெண்களின் தங்க நகைகளை சந்தேக நபர் திருடியதும் தெரியவந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய், கையடக்கத் தொலைபேசி மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டை என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.