தொழில் செய்வதில் ஏற்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுக பகுதியில் மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் படகு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாழைச்சேனை மீன்பிடி துறைமுக நிர்வாகம் மற்றும் மீன்பிடி திணைக்களம் என்பவற்றுக்கு எதிராக துறைமுகம் முன்பாக நேற்றையதினம்(28) குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெசல் மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) கட்டணம் தொடர்பாகவும், ஐஸ் கட்டியின் விலை அதிகரிப்பு, தரமான வலை கிடைப்பதில்லை, துறைமுக இடம் பற்றாக்குறையாகவுள்ளதை நிவர்த்தி செய்து தருமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் வெசல் மொனிட்டரிங் சிஸ்டம் (VMS) என்ற கருவியை அவுஸ்திரேலிய அரசாங்கம், கடத்தல்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் படகுகளை கண்கானிக்கும் நோக்கில் இலவசமாக வழங்கப்பட்ட கருவிகளுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா அறவிடுவதும் அப்பணத்தினை செலுத்தாத பட்சத்தில் படகு தொழிலுக்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
துறைமுகத்தில் முப்பத்தி நாலு அடி படகுகளை திருத்துவதற்கு கரைக்கு எடுப்பதற்கு ஏற்கனவே இருந்த கட்டணம் 10500 ரூபா பெறப்பட்ட போதும் தற்போது அந்த கட்டணம் 28000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த கட்டணத்தையும் தங்களுக்கு குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
நாங்கள் வி.எம்.எஸ். கட்டணம், துறைமுக நங்கூர பணம் போன்ற செலவுகள் காரணமாக ஒரு வருடத்திற்கு 150,000க்கு அதிகமாக மேலதிகமாக செலவளிக்க வேண்டி உள்ளது.
இந்நிலையில் மீன்பிடி துறைமுகத்தில் ஏறத்தாள 150 படகுகளுக்கு மேல் நிறுத்த இடம் போதாது ஆனால் எங்கள் பிரதேசத்தில் ஐநூறு படகுகள் உள்ளது. இதனால் நாங்கள் வேறு இடங்களில் வாடகை செலுத்தி தங்கியுள்ளோம். இதேநேரம் துறைமுகத்திற்கும் வாடகை செலுத்துவதால் ஒரு விடயத்துக்கு இரண்டு வாடகை செலுத்த வேண்டி உள்ளது.
எனவே துறைமுகத்தில் படகு கட்டும் இடத்தினை நீளமாக்கி தந்தால் வேறு இடத்தில் படகு கட்ட வேண்டிய தேவை ஏற்படாது.
துறைமுக நிர்வாகத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செலவுகளால் மீன்பிடி தொழிலை முன்னெடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஆகையால் படகு உரிமையாளர்களாகிய எங்களுக்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட படகு உரிமையாளர்களின் கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றுக்கொள்ள எந்த அதிகாரிகளும் சமூகமளிக்காத நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.