யாழ்ப்பாணத்தில் இளைஞனொருவன் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை (23) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் வீதியில் சென்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரை கடத்தி ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கி அவரிடமிருந்த தொலைபேசி, மணிக்கூடு என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
குறித்த இத்தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து விரைந்து செயற்பட்ட மானிப்பாய் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளனர்.
மேலும் இவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.