மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களாக சேவையில் இணைக்கப்பட்டு பயிற்சியினை நிறைவு செய்த பின் இன்னமும் ஆசிரிய சேவைக்கு இணைக்கப்படாமல் இருக்கும் சுமார் 141 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கும் போது, பத்தாயிரம் ரூபா சம்பளத்தொகைக்கு உதவி ஆசிரியர்களாக நாட்டில் பல பாகங்களிலும் பணிக்கு இணைக்கப்பட்டிருந்தனர், அவர்கள் பயிற்சியினை நிறைவு செய்ததன் பின்னர் ஆசிரிய சேவைக்கும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
ஆனால் மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவு செய்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் 141 ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாமல் காணப்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் நிரந்தரமாக ஆசிரிய சேவையில் இணைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், அதேபோல கல்வி அமைச்சரிடமும் மற்றும் நாடாளுமன்ற கல்வி மேற்பார்வை குழுவிடமும் கலந்துரையாடி உள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கான நிரந்த தீர்வு கிடைக்கும் எனவும் ராதாகிருஸ்ணன் உறுதியளித்தார்.