யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், காலாவதியான மற்றும் பழுதான உணவுப்பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் 6 பேருக்கும் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் கடந்த இரு வாரங்களாக மேற்கொண்ட அதிரடி பரிசோதனைகளில் பின்னரே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில், குளிர்பான நிலையம் ஒன்றில் பரிசோதனை செய்ததில் மிக நீண்டகாலத்திற்கான காலாவதி திகதி அச்சிடப்பட்ட நிலையில் 16 குளிரூட்டிகளில் குளிர்பானம் களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்திய பின், அனைத்து குளிர்பானங்களையும் அழிக்க உத்தரவு வழங்கியதுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட குளிர்பானங்களை மீளபெற்று அழிக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கினை, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி, மேலதிக சுகாதார மருத்துவ அதிகாரி ,மேற்பார்வை பொது சாகாதார பரிசோதகர் ஆகியோரின் வழிகாட்டலில் அளவெட்டி, தெல்லிப்பழை, மாவிட்டபுரம், மல்லாகம் மற்றும் கீரிமலை பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த வியாழக்கிழமை (21) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.