ரூபா 2.9 மில்லியன் மதிப்புள்ள 39 மடிக்கணனிகளை கடத்த முயன்ற இந்திய பிரஜை ஒருவர் நேற்று(21) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பு 12 மூர் தெருவில் உள்ள தற்காலிக இல்லத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் சென்னை ஹனுமந்த புரத்தை சேர்ந்த கலந்தர் எடுல் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் 39 மடிக்கணனிகளை சுங்க வரி செலுத்தி இறக்குமதி செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் செப்டெம்பர் 3 ஆம் திகதி சென்னையில் இருந்து நாட்டிற்கு வந்து தற்காலிக இல்லத்தில் தங்கியிருந்தார்.
அத்துடன் அவர் 50 மடிக்கணனிகளை முன்னதாகவே இந்தியாவுக்கு இவ்வாறு அனுப்பியிருந்தார். மேலும் அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, இலங்கையில் உள்ள கடை ஒன்றில் இந்த மடிக்கணனிகளை வாங்கியதாக கூறுவதற்கு ஆதாரமாக போலி பில் ஒன்றை காட்டினார்.
பின்னர், சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட அணைக்கட்டு வீதியின் காவல்துறை OIC, CI பெதுருஆராச்சி தலைமையிலான காவல்துறை குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.