கல்முனை மாநகர நிதிமோசடி : முன்னாள் ஆணையாளர் மற்றும் கணக்காளர் விளக்கமறியலில்!

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த இவ்வழக்கு கடந்த புதன்கிழமை (20) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் கைதான முன்னாள் ஆணையாளர் மற்றும் முன்னாள் கணக்காளரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன் குறித்த வழக்கில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 3 மற்றும் 4ம் சந்தேக நபர்களான மாநகர சபை சிற்றூழியர்கள் பல விசேட நிபந்தனையின் கீழ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதுடன்  குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு  சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி அபூபக்கர் றகீப்பிற்கு வெளிநாடு செல்வதற்கு  பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்முனை மாநகர சபையின் நிதி மோசடி விவகாரம்  தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு அண்மைக்காலமாக  நால்வர் கைதாகி இருந்தனர். இதில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஏனைய மூன்று சந்தேக நபர்களும் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொடர்ந்தும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி  திருகோணமலையில் வைத்து முன்னாள் கணக்காளர் மருதமுனை – 5 பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஏ.எச். முகமது தஸ்தீக் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  பின்னர் நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அத்துடன் கைதான முன்னாள் கணக்காளர் உள்ளிட்ட கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களின்  சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல்  வாங்கல் செயற்பாடுகளின்போது மேலும் மோசடி முறைகேடுகள் எவையும் மேலும் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவினரால்  தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.

மேலும் கடந்த காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில்  விசாரணைகள் பல தரப்பினரால்  மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்    பலர் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அத்துடன் குறித்த நிதி கையாடல் சம்பவம் தொடர்பில் கடந்த காலங்களில்  கல்முனை பொலிஸ் நிலையம் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை  பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில்  குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *