இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பை ஆராயும் சீனாவுக்குச் சொந்தமான விசேட ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் மாத இறுதி வாரத்தில் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரியுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆய்வு கப்பல் வருகையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கப்பல் வருவதற்கு இந்தியா ஏற்கனவே கடுமையான ஆட்சேபனை தெரிவித்துள்ளதுடன் கடும் அழுத்தமும் கொடுத்துள்ளது.
இதேவேளை, பல கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் குறித்த ஆய்வுக் கப்பல் கொழும்புக்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இக்கப்பல் கொழும்புக்கு வந்து கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொள்ளும் போது இலங்கை அதிகாரிகள் அதில் இருக்க வேண்டும் என்பது முதல் முக்கிய நிபந்தனையாகும். அத்துடன், ஆய்வுத் தரவுகளை இலங்கைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பகுதியில் மூன்று வாரங்களுக்கு மேலாக ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடலுக்கு அடியில் ஆய்வு என்ற போர்வையில் சீனாவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற இடங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற அச்சத்தில் இந்தக் கப்பல் வருவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.