இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
இவ்வருட ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4வது போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் விளையாடின. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ஓட்டங்களும், கேஎல் ராகுல் 39 ஓட்டங்களும் விளாசினர். இலங்கை அணி தரப்பில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்ட தொடக்க வீரர் நிஷாங்காவை 6 ஓட்டங்களில் பும்ரா வீழ்த்தியதோடு நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் 15 ஓட்டங்களில் மீண்டும் பும்ராவிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிராஜ் பந்துவீச்சில் கருணரத்னே ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இலங்கை அணி 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் தனஞ்செயா – வெல்லாலகே கூட்டணி இணைந்தது. 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 63 ஓட்டங்கள் சேர்த்தனர்.
இலங்கை அணி 171 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை அணி வெற்றிபெற 55 பந்துகளுக்கு 43 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது. பின்னர் வந்த ரஜிதா 1 ஓட்டத்தில் ஆட்டமிழக்க இதன் மூலம் இலங்கை அணி 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்ளையும் இழந்தது.
இந்நிலையில் இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.