இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA ) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.
இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே இந்த தரவுகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய gov.lk என்ற மின்னஞ்சலை பயன்படுத்தும் அனைத்து அரச நிறுவனங்கள், அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட இராஜாங்க அமைச்சுகள என்பனவற்றின் தரவுகள் இழக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் கூறுகின்றது.
குறித்த தாக்குதல் ransomware தாக்குதல் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் கூறுகின்றது. குறித்த ransomwar தாக்குதலால் சுமார் ஐயாயிரம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ICTA நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஓவ் லைன் பெக்கப் (offline backup) எனப்படுகின்ற மேலதிக தரவுக் கட்டமைப்பொன்று இருக்காததால் இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டரை மாதங்கள் கடந்தும் மின்னஞ்சல்கள் காணாமல் போயுள்ளன என ICTA குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு அரச தரவுகள் ஒருபோதும் அழிவடையாத வகையில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவத்தின் பின்னர் நாளாந்தம் ஓவ் லைன் பெக்கப் (offline backup) செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனைத் தவிர பயன்படுத்துகின்ற செயலிகளை புதுப்பிக்கவும் வைரஸ் தாக்குதல்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு முறைகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ICTA தெரிவித்துள்ளது