பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காம், திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம ஊதிய திட்டம் வழங்கப்படாமையே காரணம். தொழிலாளர் கட்சி நிர்வாகம் செய்யும் இந்நகரம், போதிய வருமானம் இல்லாததால், அத்தியாவசிய செலவுகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் நிறுத்தி வைத்துள்ள சூழலில் திவாலாகியுள்ளது.
பர்மிஹ்காம் கவுன்சிலில் ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் , உணவு தயாரிப்பு துறைகளில் பணியாற்றிய பெண் ஊழியர்கள், சம ஊதியம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தநிலையில், ஆண்களுக்கு நிகரான சம ஊதியம் பெண்களுக்கு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சம ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பெண் ஊழியர்களுக்கு 1.1 பில்லியன் பவுண்ட் தொகையை நகர நிர்வாகம் அளித்திருந்தது. இன்னும் 760 மில்லியன் பவுண்ட் தொகை வழங்க வேண்டி உள்ளது.
2023 -24 நிதியாண்டில் இந்த நகருக்கு 87 மில்லியன் பவுண்ட் பற்றாக்குறை ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனை தவிர்த்து தகவல் தொழில்நுட்ப அமைப்பு ஒன்றை ஏற்படுத்த அதிக செலவு செய்ததும், அப்போதைய பிரித்தானிய அரசு செலவை குறைத்ததும் பர்மிங்காம் நகருக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
மேலும், பர்மிங்காம் நகர சபையின் முன்னாள் ஆலோசகர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதே பர்மிங்காமின் திவால் நிலைக்கு ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.