பிரபல திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானார். சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறபடுகிறது.
இவர் இயக்குனராக பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கூட இவர் நடித்திருந்தார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு வந்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார் . மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. சின்னத்திரை ரசிகர்கள் எதிர்நீச்சல் தொடரை விரும்பி பார்ப்பதற்கு நடிகர் மாரிமுத்துவும் ஒரு காரணம்.
இந்நிலையில் அவரது திடீர் மரணம் திரை உலகத்தோடு மட்டுமல்லாமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளை திரையுலகத்தினர் பலரும் அவரது ஆத்மா சாந்திக்காக வேண்டி தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.