நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அத்துடன் கனமழையுடன் பல பிரதேசங்களில் கடுமையான காற்றும் வீசுவதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்து பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதேவேளை நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பண பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்ததனால் அவ்வீதிவழியான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிப்புக்குள்ளானது. மேலும் மரம் முறிந்து மின் இணைப்பு கம்பிகள் மீது வீழ்ந்தமையினால் பல பகுதிகளுக்கு மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் தொடர் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும் பல இடங்களில் மண் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றன. இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மழையுடன் அடிக்கடி பனிமூட்டமும் அதிகமாக காணப்படுவதால் மிகவும் அவதானமாக வாகனத்தை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.