கொழும்பில் ஆண்களை குறிவைத்து பாலியல் ரீதியில் கவர்ந்து கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தம்பதிகள் மொரட்டுவை எகொட உயன பிரதேசத்தை சேர்ந்த 33 மற்றும் 31 வயதுடைய கணவன் மனைவி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளை பாலியல் நடவடிக்கைகளுக்காக மயக்கி அழைத்து சென்று கணவருடன் இணைந்து அவர்களிடமிருந்து தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் குறித்த கணவன் மற்றும் மனைவி ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் அதிகாலை 4 மணியளவில் முச்சக்கரவண்டியில் ஏறிய சந்தேக நபரான பெண் பயணம் மேற்கொள்ள காத்திருப்பது போல நடித்து சாரதியை பாலியல் நடவடிக்கைக்கு தூண்டியுள்ளார். பின்னர் அருகிலிருந்த பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் குறித்த இடத்தில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பிக்கும் தருணத்தில் அருகில் மறைந்திருந்த கணவர் முச்சக்கர வண்டி சாரதியை தாக்கி கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க நகையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கிடைத்த முறைப்பாட்டின் படி தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கர உள்ளிட்ட அதிகாரிகள் சந்தேகநபரான தம்பதியை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகையை மீட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு முன்பும் இதுபோன்ற பல முறைப்பாடுகள் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், நடுத்தர இளம் வயதுடையவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வெட்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய தம்பதிகள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.