யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு ஒரு கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் மல்லாகத்தை சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதியன்று இரவு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக குறித்த சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மறுநாள் சிறுமிக்கு கனூலா போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆகஸ்ட் 27 ஆம் திகதி குறித்த சிறுமியின் கை வீக்கமடைந்ததையடுத்து தனக்கு கையில் கடும் வலி ஏற்பட்டுள்ளதாக சிறுமி முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மருந்து செலுத்துவதற்காக பொருத்தப்பட்ட கனூலா மருத்துவ உபகரணத்தினால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதி கனூலா மருத்துவ உபகரணம் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனூலா மருத்துவ உபகரணம் பொருத்தப்பட்டமையால் கை நாடி சேதமடைந்திருக்கலாம் என சந்தேகித்து சோதனை செய்ததில் கையிற்கு இரத்த ஓட்டம் இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சத்திர சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த பயனும் இல்லாத காரணத்தால் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது வைத்தியசாலை தவறால் ஏற்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகளை மேற்கொள்ள இரு வைத்திய நிபுணர்கள் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்