நாட்டில் தொடர்ந்து செயற்பட்டு வரும் பாதாள உலக மோதல்கள், கொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் ஆயுதப்படையினர் இணைந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவதற்கு புலனாய்வு அமைப்புகளையும், அவர்களைக் கைது செய்வதற்காக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரையும், சோதனைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடல்வழி மார்க்கமாக தப்பிச் செல்பவர்களைக் கைது செய்ய கடற்படையினரும், விமானம் மூலம் தப்பிச் செல்லும் குற்றவாளிகளை கைது செய்ய இரகசியப் பொலிஸாரும் தயார் நிலையில் செயல்படவுள்ளனர்.
எவ்வாறாயினும், பாதாள உலக தலைவர்களில் முக்கியமான பலரை கைது செய்வதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.