தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதியதொரு அரசியலமைப்பு நிச்சயம் இயற்றப்படும் எனவும் அதன்மூலம் அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய யுகம் உருவாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அத்திவாரம் உடைந்து விழுந்த நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்”. எனவே, எமது ஆட்சியின் கீழ் இந்த அத்திவாரம் நிச்சயம் கட்டியெழுப்படும்.
புதிய அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி, ஊழல், மோசடியற்ற ஆட்சி, சிறந்த அரச சேவை, இன ஐக்கியம், ஏற்புடைய வெளிவிவகாரக் கொள்கை ஆகியவற்றின் ஊடாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
இன்றைய நவீன உலகில் தொழில்நுட்பம், வர்த்தகத்தால் உலகம் இணைந்துள்ளது. எனவே, தனித்துச் செயற்படும் வெளிவிவகாரக் கொள்கை இனியும் ஏற்புடையதாக அமையாது. எனவே, பலமானதொரு வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கப்படும். வளங்களை விற்று தரப்புகளை திருப்திப்படுத்தும் கொள்கையாக அது அமையாது. ஊழல், மோசடியற்ற அரச சேவையை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைத்து இன மக்களினதும் நீதியான உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய அரசியலமைப்பொன்று வேண்டும் எனவும் மக்கள் கோருகின்றனர். எனவே, மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். எமது எதிர்ப்பார்ப்பும் இதுவே.
மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் ஊடாக அத்திவாரத்தை ஏற்படுத்திய பின்னர் பொருளாதாரக் கொள்கை, சுகாதாரக்கொள்கை பற்றிப் பேசலாம். அதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தோல்வி கண்ட பொறிமுறையாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.