காலி சிறைச்சாலையில், கைதிகள் இரண்டு பேர் உயிரிழந்தமைக்கு காரணமாக அமைந்த மெனிங்கோகோகஸ் (Meningococcus) பற்றீரியா தொற்றுடன் ஒருவர் ரத்மலானை சுகாதார வைத்திய அதிகார பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நபர் ரத்மலானை பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் ஜாஎல பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் காலி சிறைச்சாலையின், கைதிகள் சிலர் மெனிங்கோகோகஸ் (Meningococcus) பற்றீரியா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர் எனபது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் சிறைச்சாலையிலிருந்து வெளியேறத்தடை விதிக்கப்பட்டு இருந்ததுடன், சிறைச்சாலைக்கு புதிய கைதிகளை அனுமதிப்பதற்கும் அவர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தவும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
மெனிங்கோகோகஸ் (Meningococcus) பற்றீரியா தொற்றுக்கான அறிகுறிகளாக காய்ச்சல்,தலைவலி, கழுத்து வலி, வாந்திபேதி, உடலில் வெடிப்புகள் தோன்றுதல் என்பன அறிவிக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், சில வாரங்களில் குறித்த தொற்றை நுண்ணுயிர் கொல்லிகள் மூலம் குணப்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என சுகாதார துறை குறிப்பிட்டிருந்தது.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சி.ரி.ஸ்கேன் பரிசோதனை இரண்டாவது இயந்திரம் நேற்று முந்தினம் முதல் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அரச கதிரியக்க தொழிநுட்ப நிபுணர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.