கொழும்பு – கண்டி வீதியில் தங்கோவிட்ட – கம்புருதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஏழு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே திசையில் பயணித்த இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று பயணி ஒருவரை இறக்கி விடுவதற்காக நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தே பின்னால் வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு பஸ்களிலும் பயணித்தவர்களில் பின்னால் வந்த பஸ்ஸின் சாரதி உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த தாய் ஒருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பெண்ணுடன் வைத்தியசாலையில் உள்ள அவரது ஒன்றரை மாதக் குழந்தைக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வவுனியா – கொழும்பு பேருந்தின் சாரதி கைது செய்யப்பட உள்ளார்.