சந்திராயன்-3 விண் நோக்கிய வெற்றி பயணம்.

கடந்த ஜூலை 14-ஆம் தேதி பூமியில் இருந்து புறப்பட்ட சந்திரயான் -3 திட்டத்தின் பயணம் தற்போது படிப்படியாக நிலவை நெருங்கியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தின் பயண பாதையின் தொகுப்பு

கடந்த ஜூலை 13-ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் பிற்பகல் 1 மணி 5 நிமிடத்தில் சந்திரயான்-3 திட்டத்துக்கான தருணம்
தொடங்கியது .

இருபத்தி ஐந்தரை மணி நேர கவுன்டவுன் முடிவடைந்து ஜூலை 14-ஆம் தேதி பிற்பகல் சரியாக 2-35 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து கொண்டு எல்.வி.எம்-3 எம்-4 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

விண்ணில் ஏவப்பட்ட 108-வது விநாடியில் பூமியின் தரைப் பரப்பில் இருந்து சுமார் 44 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்ற போது பயில்வான் ராக்கெட்டின் எல்-110 திரவ எரிபொருள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

அதன் பின் 127-வது விநாடியில் 62 கிலோ மீட்டர் உயரத்தை தாண்டிய போது எஸ்-200 திட பூஸ்டர்கள் இரண்டும் பாகுபலி ராக்கெட்டில் இருந்து துல்லியமாக பிரிந்தன.

இதன் மூலம் வேகமெடுத்து பயணத்தை தொடர்ந்த ராக்கெட், அடுத்த 67-வது நொடியில் தரையில் இருந்து 114 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றதும், விண்கலத்தின் வெளிப்புற பாதுகாப்பு கவசம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

பயில்வான் ராக்கெட் புறப்பட்டு 6 நிமிடம் 5 விநாடி கடந்த நிலையில் எல்-110 திரவ எரிபொருள் எஞ்சின், ராக்கெட்டில் இருந்து துல்லியமாக பிரிந்தது. இந்த 3 செயல்பாடுகளின் மூலம் எல்.வி.எம் ராக்கெட் பூமியின் தரைப்பரப்பில் இருந்து 175 கிலோ மீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிறுத்தியது.

அதற்கு அடுத்த 2 விநாடிகளில், சி-25 உறைகுளிர் எரிபொருள் எஞ்சினை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கினர். அதன் மூலம் ராக்கெட்டுக்கு விண்வெளியில் உந்துதல் வழங்கப்பட்டது. சுமார் 16 நிமிடங்கள் இயக்கப்பட்ட ராக்கெட், பூமியின் 174 புள்ளி 69 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது சி-25 எஞ்சின் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

அதன் பின் தொடர்ந்து சுமார் 5 கிலோ மீட்டர் உயரத்துக்கு 15 விநாடிகள் பயணித்த நிலையில், ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் பூமியில் இருந்து 179 புள்ளி 19 கிலோ மீட்டர் உயரத்தில் வெற்றிகரமாக பிரிந்தது.

புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் முதல் உயரம் உயர்த்து நடவடிக்கை ஜூலை 15-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அப்போது 41,762 கிலோ மீட்டருக்கு 173 கிலோ மீட்டர் தொலைவுள்ள நீள்வட்ட பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

இதனைஅடுத்த அடுத்த 2 தினங்களில், ஜூலை 17-ஆம் தேதி 2-ஆவது உயரம் உயர்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விண்கலம் 41,603 கிலோ மீட்டருக்கு 226 கிலோ மீட்டர் தொலைவுள்ள சுற்றுப் பாதையில் செலுத்தப்பட்டது.

இதற்கு மறுநாள், ஜூலை 18-ஆம் தேதியே 3-வது உயரம் உயர்த்து நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட இஸ்ரோ, ஜூலை 20-ஆம் தேதி 4-வது உயரம் உயர்த்து நடவடிக்கை செயல்படுத்தியது. அப்போது 71,351 கிலோ மீட்டருக்கு 233 கிலோ மீட்டர் தொலைவுள்ள நீள்வட்டப் பாதையில் விண்கலம் இருந்தது.

அதன் பின்னர் ஜூலை 25-ஆம் தேதி இறுதி உயரம் உயர்த்து நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டு 1 லட்சத்து 27,609 கிலோ மீட்டருக்கு 236 கிலோ மீட்டர் நீளமுள்ள வட்டப்பாதையில், பூமிக்கு வெகு தொலைவில் அனுப்பியது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சரிசமமான ஈர்ப்பு விசைப் புள்ளி கொண்ட பகுதிக்கு சந்திரயான்-3 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்கலமானது சம ஈர்ப்புவிசை புள்ளியை நோக்கிய பாதையில் பிசிறுகள் ஏற்பட்டு, குறித்த பாதை விட்டு மாறிச் செல்லாமல் இருக்க முயற்சிகளை செய்துகொண்டே வந்தனர்.

சம ஈர்ப்புவிசைப் புள்ளிக்கு சென்ற போதிலும் விண்கலம் பூமியின் ஈர்ப்புவிசைப் பிடியில் இருந்ததால், விண்கலம் மீண்டும் பூமியை நோக்கித் திரும்பிவிடாத வகையில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி கூடுதல் உந்துவிசை கொடுத்து மேலும் தள்ளிவிட்டனர், இஸ்ரோ விஞ்ஞானிகள்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி சந்திரயான் 3-ஐ நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கத் தொடங்கினர். அப்போது 164 கிலோ மீட்டருக்கு 18,074 கிலோ மீட்டர் தொலைவுள்ள நிலவின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான்-3 இருந்தது.

அதற்கு மறுநாள், ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுப்பாதை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 170 கிலோ மீட்டருக்கு 4,313 கிலோ மீட்டர் தொலைவுள்ள நீள்வட்டப்பாதையில் சந்திரயான்-3 பயணித்தது.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி 2-வது உயரம் குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். அப்போது 174 கிலோ மீட்டருக்கு 1,437 கிலோ மீட்டர் தொலைவுள்ள நீள்வட்டப் பாதைக்கு சந்திரயான்-3 கொண்டு வரப்பட்டது.

ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவை நெருங்கி 151 கிலோ மீட்டருக்கு 179 கிலோ மீட்டர் தொலைவுள்ள சுற்று வட்டப்பாதைக்கு கொண்டு வரப்பட்ட விண்கலம், ஆகஸ்ட் 16-ஆம் தேதியன்று 153-க்கு 163 கிலோ மீட்டர் என்ற தொலைவில் சுற்றி வந்தது.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி சந்திரயான்-3 உந்துவிசை மாடியூலில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

வெற்றிகரமாக பிரிந்து சுற்றிய விக்ரம் லேண்டர் நிலவின் துல்லியமான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

ஆகஸ்ட் 18-ஆம் தேதியன்று விக்ரம் லேண்டர் 113 கிலோ மீட்டருக்கு 157 கிலோ மீட்டர் தொலைவுள்ள வட்டப்பாதையில் சுற்றி வந்தது.

அதற்கு மறுநாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. சுற்றுப் பாதையும் 25-க்கு 134 கிலோ மீட்டர் தொலைவாக குறைக்கப்பட்டது.

விக்ரம் லேண்டரின் துல்லியமான கேமராவில் இருந்து பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு நிலவின் மேடு, பள்ளங்கள் தெளிவாக தென்படும் காணொளி கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சந்திரயான்-3 திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சிகளில் மும்முரமாக உள்ளனர்.

அத்துடன் நிலவின் தென்துருவத்தில் இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்கவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.