இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று முன்னிரவு(21) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பல பிரிவுகளின் கீழ் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள இறைச்சிக் கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டதுடன், இக்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அத்துடன் “இதுவரை யார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர் என்பது தெரியவரவில்லை. மேலும் உயிரிழந்தவர் எதற்காக கொல்லப்பட்டார் என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை என குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணைகளை பல குழுக்கள் மூலம் நடத்த ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதுடன், சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.” என தெரிவித்துள்ளார்
மேலும், நாட்டில் இந்த ஆண்டுக்குள் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 60 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் காயமடைந்துள்ளனர் என நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.