குப்பையில் வீசப்பட்ட பெறுமதியான தங்க ஆபரணங்கள் – உரியவர்களிடம் ஒப்படைத்த சுகாதாரத் தொழிலாளி !

யாழ் – சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரினால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி மண்டுவில் வட்டாரத்தில் வேலுப்பிள்ளை வீதியில் வசிக்கும் குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டில் உள்ள சுமார் 8 பவுண் பெறுமதியான நகைகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பழைய துணி ஒன்றில் கட்டி குப்பைகள் போல வீட்டிலேயே பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் அவரது வீட்டை சுத்தம் செய்கின்ற பொழுது குறித்த நகைகளும் குப்பைகளோடு குப்பைகளாக கட்டப்பட்டு வீதியில் கொட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் அன்றைய தினம் மண்டுவில் வட்டாரத்தில் வழமை போல் கழிவகற்றும் நடவடிக்கையில் சாவகச்சேரி நகராட்சி மன்ற சுகாதாரப் பகுதியினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் முன்னால் இருந்த குப்பைகளும் சுகாதார தொழிலாளர்களால் அகற்றப்பட்டு உழவியந்திரத்தில் நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான குப்பைகள் தரம் பிரிக்கின்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனதையடுத்து நிலைமையை உணர்ந்த உரிமையாளர் குப்பைகளோடு நகைகளும் வீதியில் கொட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கேமராக்களை சோதனையிட்டுள்ளார்.

அப்பொழுது இன்று காலை அப்பகுதியில் நகராட்சி மன்ற கழிவகற்றும் வாகனம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டிருந்தமை அவதானித்துள்ளார். இதை அடுத்து உடனடியாக சாவகச்சேரி நகராட்சி மன்றத்துக்கு சென்று பிரதம நிர்வாக அதிகாரி செ.அனுசியாவிடம் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து உடனடியாக செயற்பட்ட நகராட்சிமன்ற நிர்வாக அதிகாரி மற்றும் நகராட்சி மன்ற சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர்களான பா.தயாகரன், மற்றும் பா.நிஷாந்தன் ஆகியோர் நகராட்சி மன்ற கழிவு சேகரிக்கும் இடத்திற்கு வெளியிலிருந்து உள்ளேயும் உள்ளே இருந்து வெளியேயும் எவரையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட்டு சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த குடியிருப்பாளர் பழைய துணியில் கட்டி குப்பைகளோடு குப்பையாக வீதியில் வீசிய சுமார் 8 பவுண் நகைகள் குடியிருப்பாளரின் முன்னிலையிலேயே சுகாதார தொழிலாளியான சண்முகம் தமிழ்சனால் மீட்கப்பட்டு உடனடியாகவே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.