யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று முந்தினம் (20.08.2023) இரவு பதிவானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்தை கறுப்பு துணியால் கட்டி வந்த நால்வர் உள்ளடங்கிய கும்பல் அத்துமீறி வீட்டினுள் பிரவேசித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததுடன் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, சமையலறை உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளதுடன் இருமோட்டார் சைக்கிள்களை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான 20 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தடயவியல் பொலிஸார் நேற்று தடயங்களை ஆய்வுசெய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்