இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மகோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபினரின் இல்லத்தில் இருந்து கொடிச்சீலைக்கு நேற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று பாரம்பரிய முறைப்படி கல்வியங்காடு வேல் மடம் ஆலயத்துக்கு கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.
அங்கும் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் சிறிய ரதத்தில் கொடிச்சீலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள மஹோற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும், இம் மகோற்சவம் தொடர்ச்சியாக 25 நாள்களுக்கு இடம்பெறவுள்ளது.
இதேவேளை வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு சுற்றுவீதிப்பகுதியில் நேற்று காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்திறக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் எதிர்வரும் செப்டெம்பர் 16ம் திகதி வரை அமுலில் இருக்குமென யாழ்ப்பாண மாநகர சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் வேளைகளில் பருத்தித்துறை வீதியூடாக பயணிக்கும் , வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு மற்றும் வெள்ளை நிற கொடிகளால் எல்லை படுத்தப்படும் பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர வேறு எந்த வாகனங்கள் உட்பிரவேசிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.