கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் சிறுவனின் உடல்நிலையில் பல பிரச்சினைகளை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
களனி திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய தெனுஜ சஸ்மிர நாணயக்கார என்ற சிறுவன், கடந்த 9ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் 6 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் குணமடையவில்லை. அவரது நோயைக் கண்டறிய முடியவில்லை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துள்ளார்.
இதன் பின்னர் சிறுவனின் நுரையீரல் சுருங்கிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்த சிறுவனுக்கு 3 தடுப்பூசிகளை மருத்துவர்கள் செலுத்தியதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரியவிடம் கேட்ட போது, குறித்த சிறுவன் காச நோயினால் உயிரிழந்துள்ளதாகவும், வழங்கப்பட்ட தடுப்பூசி காரணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.