உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் நேற்று முந்தினம் (17.08.2023) ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த மூன்று நிறுவனங்களின் செயற்திறனுக்கு தனி முக்கியத்துவம் அளித்து, இந்தப் புதிய பொறிமுறையை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
அத்துடன் இது தொடர்பான விரிவான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தயாரிப்பதற்கு மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாகாண ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி விக்ரமசிங்கவினால் இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண ஆளுநர்கள், தத்தமது மாகாண சபை அதிகார வரம்புகளுக்குள் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான அவசரத் தேவையை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.