பியர் அருந்திவிட்டு பாடசாலைக்கு வந்த 14 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றிற்கு முன்பாக பிரதான வீதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கெக்கிராவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் குறித்த மாணவி மீது சந்தேகம் அடைந்து மாணவியை பிடித்துள்ளனர்.
பின்னர் குறித்த மாணவியை கெக்கிராவ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சுமித் முனசிங்கவிடம் அழைத்து வந்து ஒப்படைத்த பின்னர் மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாணவி எப்படி மது அருந்தினார் என்பது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, சிறுமியின் தந்தையின் தந்தை (தாத்தா) தனக்கு பியர் குடிக்க கற்றுக் கொடுத்ததாக சிறுமி கூறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொலிஸார், கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தின் நன்னடத்தை அலுவலகத்திற்கு அறிவித்ததன் பின்னர், சம்பவம் தொடர்பில் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி விசாரணையின் படி, சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் திரு. கருணா கீர்த்திரத்ன, மாணவி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டபோது, அதிபர் தொலைபேசியைத் துண்டித்துவிட்டு விசாரணைகளை ஆதரிக்க மறுத்துவிட்டார்.
பின்னர், குறித்த கல்லூரியின் அதிபர் விசாரணைக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் விசாரணைக்கு இடையூறாக இருப்பதாகவும் சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரி திரு.கீர்த்திரத்ன கெக்கிராவ பிராந்திய கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்தார்.
குறித்த சிறுமி பியர் குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்தமைக்கான காரணம் மற்றும் அவளுக்கு பியர் குடிக்கக் கற்றுக் கொடுத்தவர் யார் என்பது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கெக்கிராவ பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி கல்வி கற்கும் பாடசாலையின் ஒழுக்கத்திற்கு பொறுப்பான பல ஆசிரியர்களிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கெக்கிராவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுமித் முனசிங்கவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.