செப்டம்பர் 20 முதல் சினோபெக்(SINOPEC) தனது வர்த்தக நாமத்தின் கீழ் வர்த்தகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு. காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது சந்தையில் விற்கப்படும் அதிகபட்ச விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்ய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் பேசிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு. காஞ்சன விஜேசேகர, நேற்று காலை நிலவரப்படி சினோபெக் தனது 150 விநியோகஸ்தர்களில் 109 பேருடன் ஒப்பந்தங்களை முடித்துள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் 150 விநியோகஸ்தர்கள் உடனும் ஒப்பந்தங்களை முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள், அனைத்து விநியோகஸ்தர்களுடனும் தங்கள் பிராண்டின் கீழ் வணிகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
சினோபெக் நிறுவனம் தமது அனைத்துப் பணிகளையும் அதற்கு முன்னதாக முடிக்கும் பட்சத்தில் அன்றைய தினத்தில் இருந்தே குறைந்த விலையில் எரிபொருளை வழங்க தயாராக இருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.