10ஆம் தரத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆரம்ப காலத்தில் மாணவர்கள் 10 ஆம் தரத்தில் பொதுப் பரீட்சையை எதிர்கொண்டதாகவும், பின்னர் அது 11 ஆம் தரத்திற்கு ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, 10ம் தரப் பொதுப் பரீட்சையை நடத்துவது தொடர்பில் உரிய தரப்பினருடன் தற்போது கலந்துரையாடி வருவதாகவும், எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இந்த பணியானது தரம் 1, 6 மற்றும் 10 ஆகிய மூன்று தர வகைப்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் இப்பணியை ஒரே நேரத்தில் செய்ய முடியாதது, என்பதால் அதனை ஆரம்பம், கனிஷ்ட இளநிலை, சிரேஷ்ட இளநிலை என்று வகைப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
அத்துடன் கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக உயர்தரப் பரீட்சைக்கு தயாராகவுள்ள மாணவர்கள் மிகக் குறுகிய காலத்தில் தங்கள் அறிவை மேம்படுத்தி தேவையான புது விடயங்களை அறிந்து செயற்பட புதிய மாற்றங்கள் உருவாக வேண்டும், என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.