அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (09.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாதாந்தம் 5.2 பில்லியன் ரூபா பணம் செலவிடப்படுகிறது.
20 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகளை வழங்குவதே அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் நோக்கம் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 38 வீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அஸ்வெசும சமூக நலன்புரித் திட்ட உதவிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது பிரதேச செயலாளர்களின் தலைமையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க முன்னதாக அறிவித்திருந்தார்.
மேலும் இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் 2024ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஆரம்பிக்கப்பட தீர்மானிக்க பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் தகுதியானவர்களுக்கு, நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கே பணம் வைப்புச் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.