அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
13 தடவைகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஸ்தாபிக்க முயற்சித்து தோல்வியடைந்த நிலையில் மீண்டும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளை அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்பிப்பது மருத்துவப் பட்டத்தின் தரத்தை குறைவுக்கு உட்படுத்துவதாகவும் அது சுகாதார அமைப்பின் தரத்தை நேரடியாகக் கெடுப்பதாகவும் வைத்தியர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த திட்டத்திற்கு எதிராக செயற்படுவதற்கு தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஊடாக இந்தியாவில் உள்ள மருத்துவத் துறைக்கு ஏற்பட்ட கதி இலங்கையின் மருத்துவத் துறைக்கும் ஏற்படும்.
எவ்வித கட்டுப்பாடும் இன்றி மருத்துவக் கல்வியை வழங்க அனுமதித்ததன் விளைவாக உருவான போலி மருத்துவர்களை விட இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படித்த வைத்தியர்கள் ஒப்பீட்டளவில் சிறந்தவர்கள் என இந்திய சுகாதார செயலாளரே கூறியதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் அச்சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தனியார் மருத்துவக் கல்வியை ஆரம்பிக்க வேண்டுமானால் என்ன செய்வது, நாட்டுக்கு எத்தனை வைத்தியர்கள் தேவை, எத்தனை வைத்தியர்கள் அரசாங்க மருத்துவக் கல்லூரிகள் மூலம் உருவாக்கப்படுவார்கள் என்பதன் அடிப்படையில் அரசாங்கம் கொள்கை முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறானதொரு தெளிவான நோக்கத்துடன் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதனை பரிசீலிக்க தயார் எனவும், ஆனால் தங்கள் அரசியல் நலன் கருதி இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டால் அதனை எதிர்ப்போம் எனவும் அவர் கூறுகிறார்.