யாழ் நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது கலாசார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்தப்பு !
இந்திய -இலங்கை நட்பு ரீதியாக யாழ்ப்பாணம் பிரதான நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் உத்தியோகபூர்வமாக நாளை(11/02) சனிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இந்நிலையில் இதற்கான ஒழுங்கமைப்புக்கள் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகள், யாழ்.மாநகர சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிகழ்வில் விசேட அதிதிகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன , இந்திய இணை மத்திய அமைச்சர் எல்.முருகன் , பா.ஜா.கட்சியின் தமிழகத்தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளனர்
இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் 12 மாடிகளுடன் கொண்ட மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கலாச்சார மையமானது 600 பேரை உள்ளடக்கக் கூடியதான வசதிகளுடன் கூடிய திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாட்டுடனான மண்டபம், இணையதள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பல்நோக்கு அமைப்பிலான நூலகம், கண்காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம், அருங்காட்சியகம், நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள், மொழிகள் உள்ளிட்ட வகுப்புக்களை நடத்துவதற்கான வசதிகளும் உள்ளன.
இதேவேளை இந்நிகழ்வு முடிந்த பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர தின நிகழ்ச்சிகள் இந்த மண்டபத்தில் இடம்பெறும். இதில் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரநாள் ஊர்தி பவணி நடைபெறும். இரவு 7 மணிக்கு முற்றவெளி மைத்தானத்தில் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.
மேலும் ஜனாதிபதி தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டம் இன்று மாலை ரில்கோ ஹொட்டலில் இடம்பெறவுள்ளது. இதில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அடுத்த கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெறும்.