கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம் – முதற்கட்டமாக 152 பேருக்கு பயணவசதி..!

கனடாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்ததால் வியட்நாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட 302 இலங்கையர்களில் அரைப்பங்குக்கும் அதிகமானவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

இதுவரை 152 பேர் நாடு திரும்ப இணங்கியுள்ளதால் அவர்களுக்குரிய பயண வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

 

குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார்.

 

இலங்கைத் தமிழ் ஏதிலிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை ஏதிலிகள் மூன்று குழுக்களாக பிரித்து, மூன்று முகாம்களில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில், அவர்களில் இரு ஏதிலிகள் தங்களை மீளவும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என தெரிவித்து தங்களது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்தனர்.

 

அவர்களில் யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *