சந்தர்ப்பவாத ஒப்பந்தகார கும்பல்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இடமில்லை- சஜித் பகிரங்கமாக தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி ஒரு தூய சக்தி என்றும், ஒன்றிணைய வருபவர்கள் சகலரையும் சேர்ப்பதற்கும், குப்பை கூலங்களை சேர்த்துக்கொள்வதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் நேற்று (18) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்ப விரும்பும் முற்போக்குத் தரப்புகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இடமிருப்பதாகவும், சந்தர்ப்பவாத ஒப்பந்தகார கும்பல்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இடமில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கிட்டிய எதிர்காலத்தில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரித்து மக்களுக்கு கூடிய சிரமங்களை கொடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இத்தோடு நின்றுவிடாது முழு நாடும் ஏலம் விடப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் .