தன்னைத் தானே கடத்தி, கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாய் பணத்தை பெற முயன்ற பெண்!
தான் கடத்தப்பட்டதாக கூறி கணவன் மற்றும் பிள்ளைகளை ஏமாற்றி 35 இலட்சம் ரூபாய் பணத்தை பெற முயன்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி ஆனமடுவையில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது மகள் வசிக்கும் வாரியபொல – ஹன்ஹமுன – நவகத்தம பகுதிக்கு சென்றதாகவும், தனது கணவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அன்றைய தினம் ஆனமடுவ நகருக்கு வருவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
எனினும் அன்று மாலையில் இருந்து அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனமடுவ நகருக்கு வருவதாகக் கூறிய தனது தாயாரை எதிர்பார்த்து காத்திருந்த பெண்ணின் இளைய மகன் இது தொடர்பில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம், ஆனமடுவ காவல்துறையினர் குறித்த பெண் பயணித்த இடங்கள் மற்றும் அது தொடர்பான வீதிகளின் கண்காணிப்பு நிழற்படக் கருவிகளை பரிசோதித்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பின்னர், குறித்த தலைமறைவாக இருந்த இடத்தை காவல்துறையின் கண்டுபிடித்தனர்.
கடனை அடைப்பதற்காக கணவரை ஏமாற்றி பணம் பெறும் நோக்கில் தலைமறைவானதாக அந்த பெண் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.