2022 மாத்திரம் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி சென்றோர் லட்சம் பேர்!
இவ்வருடம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும், இவ்வருடம் அதிகளவானோர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இன்று (12/18) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக தாம் கடமையை ஆரம்பிக்கும் போது தென்கொரியாவில் மாதாந்தம் 300 – 400 பேர் வரை வேலைக்காக சென்றதாகவும் ஆனால் இந்த அமைச்சினை தாம் பொறுப்பேற்ற பின்னர் அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது தென் கொரியாவில் மாதாந்தம் சுமார் ஆயிரம் இலங்கையர்களை வேலைக்கு அனுப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய நிலவரப்படி 6120 பேர் கொரியாவில் வேலைக்குச் சென்றுள்ளனர். 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென் கொரியாவுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை இதுவே ஆகும்.
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைக்கு சென்றவர்களில் பெரும்பாலானோர் குவைத்துக்கு சென்றவர்களாவர். இதன்படி 76,579 பேர் அங்கு சென்றுள்ளனர். கத்தாருக்கு 69,992 பேரும், சவுதி அரேபியாவுக்கு 51,421 பேரும் சென்றுள்ளனர். 4,410 தொழிலாளர்கள் ஜப்பானுக்குப் சென்றுள்ளனர்.
தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதுடன் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சட்டரீதியாக நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் மனிதாபிமான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளியை வரவேற்க “ஹோப் கேட்” என்ற சிறப்பு வாயில் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வீட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்படும் என்றும், அதற்குப் பதிலாக சர்வதேச தரத்தில் மேம்பட்ட வீட்டுக் காவலர்கள் வேலைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
இதன்போது, வெளிநாட்டில் வேலை செய்து உழைத்து சம்பாதித்த பணத்தில் சொந்தமாக தொழில் ஆரம்பித்து தொழில்முனைவோராக வாழ்க்கையை வென்று சாதனை படைத்த ஐந்து இலங்கையர்களையும் அமைச்சர் மதிப்பீடு செய்தார்.