முன்வைக்கப்படும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில் இலங்கை கோரிய கடன்தொகையை வழங்க முடியாது!
இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் கடனை பெற்றுக் கொள்வதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்படும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில் இலங்கை கோரிய கடன்தொகையை வழங்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்களை ஆதரிப்பதாக இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள நாடுகள் உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வரை இலங்கை கோரிய கடன்தொகையை வழங்க முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஏனைய அங்கத்துவ நாடுகளும் உறுதியளிக்கவேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கி சுயாதீனமாக செயல்படும் நிறுவனமாக பாராளுமன்ற சட்டத்தின் மூலம் மாற்றப்பட வேண்டும் எனவும், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி இரண்டாம் வாரம் நடக்கவுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர் கூட்டத்திற்கு முன்னதாக குறித்த நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் இலங்கை முன்மொழிந்த கடன்தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் முயற்சிகளை எடுக்கும் என சொல்லப்பட்டுள்ளது.