வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை! தேடப்படும் கிரிக்கெட் பிரபலம்!
Colombo பொரளை பொது மயானத்திற்கு அருகில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கைகள் கட்டப்பட்ட நிலையில், தனது காருக்குள் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் தினேஷ் ஷாப்டர் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
பொரளைக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறி, நேற்று பிற்பகல் தினேஷ் ஷாப்டர் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸை சந்திப்பது இந்த பயணத்தின் நோக்கம் என அவர் தமது வீட்டாருக்கு கூறியுள்ளார்.
பிரையன் தோமஸ் 1400 இலட்சம் ரூபாவை பெற்று மீண்டும் வழங்காமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பிற்பகல் 2 மணியளவில் வௌியேறிய அவரின் தொலைபேசிக்கு மனைவி பல தடவைகள் முயற்சித்த போதிலும் தொடர்புகொள்ள முடியவில்லை.
பின்னர் தொலைபேசி செயலி ஒன்றின் மூலம் தனது கணவரின் கையடக்க தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார்.
அதன்போது, கையடக்க தொலைபேசி பொரளை மயானத்தில் காணப்படுவதாக சமிக்ஞை கிடைத்தவுடன் தினேஷ் ஷாப்டரின் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியொருவரை அவ்விடத்திற்கு அனுப்பியுள்ளார்.
அந்த அதிகாரி சென்று பார்த்த போது, தினேஷ் ஷாப்டர் கை ,கழுத்து கட்டப்பட்ட நிலையில் காருக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொரளை மயானத்தின் ஊழியர் ஒருவருடன் இணைந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஷாப்டர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். 51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 மல்பார பகுதியை சேர்ந்தவராவார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு உள்ளிட்ட நான்கு குழுக்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர், பிரையன் தோமஸிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தினேஷ் ஷாப்டர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களில் ஒருவராவார். அத்துடன், கிரிக்கெட் கட்டுப்பாட்டாளராக செயற்பட்ட சந்திரா ஷாப்டரின் மகனாவார்.
சட்டப் பட்டதாரியான தினேஷ் ஷாப்டர், பிரித்தானியாவின் பட்டயக்கணக்காய்வாளர் நிறுவனத்தின் ஒரு உறுப்பினரும் ஆவார்.
வியாபார நிர்வாகம் தொடர்பில், முதுமாணி பட்டம் பெற்ற அவர், நாட்டின் பிரபல நிதி நிறுவனமொன்றின் முகாமைத்துவ பணிப்பாளராகவும், பிரபல காப்புறுதி நிறுவனமொன்றின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
தினேஷ் ஷாப்டபர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்தவர்கள் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களும், குடும்பத்தவர்களும் இந்த திடீர் மரணம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, உண்மைகளை வௌிக்கொணர இடமளிக்குமாறு தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தினர் ஊடகங்களிடமும் பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினேஷ் ஷாப்டர் குடும்பத்தின் இதயம் போன்றவர் என கூறியுள்ள அவரது குடும்பத்தினர், அவர் வியாபாரம், விளையாட்டுத்துறைக்காக பாரிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர், நண்பர்கள், உள்ளிட்ட பலராலும் அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் தினேஷ் ஷாப்டர் நினைவுகூரப்படுவார் என அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.