காணாமல் ஆக்கப்பட்டவர்களை நீங்கள் கொன்று விட்டீர்கள்! சம்பந்தன் நேரடி தெரிவிப்பு.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும், ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தாம் எடுத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிபர் தலைமையிலான சர்வகட்சித் தலைவர்களின் கூட்டம் நன்றாக நடைபெற்றது.
போர் நிறைவடைந்து 13 வருடங்களின் பின்னர் இப்போதுதான் நல்லிண்ணக்க மாநாட்டைக் கூட்டியிருக்கின்றீர்கள். இதற்கு நாங்கள் ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் என்று இதன்போது கூறினேன்.
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். காணாமல்போனோர் தொடர்பில் இனியும் கதைக்க வேண்டாம். காணாமல்போனவர்களைக் கொன்றது நீங்கள். அதனால் இதைப் பற்றி கதைப்பதில் பிரயோசனம் இல்லை.
அதனால் இந்த விடயத்தை முடிவுக் கொண்டு வந்து காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசனை செய்யுங்கள். காணாமல்போனோர், காணாமல்போனோர் என்று பாட்டுப் பாடி காலத்தை இழுத்தடிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டேன்.
அரசியல் கைதிகள் நீண்ட காலம் சிறைகளில் வாடுகின்றார்கள். அவர்களை உடனடியாக விடுவியுங்கள். விரைந்து அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். காணி தொடர்பான பிரச்சினைக்கும் விரைந்து முடிவுகட்டப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் காணிகள் இராணுவத்தினராலும், வனவளத்திணைக்களத்தாலும், தொல்லியல் திணைக்களத்தாலும், மகாவலி திட்டத்தாலும் சுவீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு (சுதந்திர தினம்) முன்னர் முழுக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.