தமிழ் இளைஞர் ஒருவர் கொழும்பில் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்!
கொழும்பு நாரஹேன்பிட்டி பார்க் வீதியிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் ஹாலியால திக்வெல்ல ஹேன பகுதியைச் சேர்ந்த இருபத்தி மூன்று வயதுடைய இராமலிங்கம் மாணிக்கம் என்பவராவார்.
குறித்த நபர் (10.12.2022) இரவு குறித்த கட்டிடத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், சில தேவைகளுக்காக மூன்றாவது மாடிக்கு சென்ற போது போதையினால் பாதுகாப்பற்ற இடத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடன் கட்டிடத்தில் பணிபுரியும் ஏனைய இருவர் நேற்று காலை அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதாக கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நபரிடம் தெரிவித்ததாகவும் பின்னர் அவர் வந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.