கொள்ளுபிட்டியவில் இடம்பெற்ற கோர விபத்து! சாரதி தப்பியோட்டம்.
கொள்ளுப்பிட்டி இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று முச்சக்கர வண்டியின் மீது மோதி ஏற்பட்ட பாரிய விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை (11.12.2022) இடம்பெற்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்துள்ள நபர் கஹதுடுவ, பொல்கசோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடையவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
பம்பலப்பிட்டியிலிருந்து காலி முகத்திடல் நோக்கிச் சென்ற கார் அதே திசையில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த முச்சக்கர வண்டி சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கு உள்ளாகிய காரில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் இருந்ததாகவும் அவர்களில் 29 மற்றும் 39 வயதுடைய இரு பெண்களும் காயம் அடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த பின்னர் காரினை செலுத்திய சாரதி தப்பி சென்றுள்ளதாகவும் விசாரணையின் போது தெரியவருகின்றது. காரில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
காரின் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.